முற்காலத்தில் பிரம்மதேவன் சிவபெருமானைப் போல் ஐந்து சிரங்களைக் கொண்டவராக விளங்கினார். அதனால் அவருக்கு அகந்தை ஏற்பட்டு உயிர்களுக்கு தீங்கு விளைவித்தார். தேவர்கள் சிவபெருமானிடம் வேண்ட சிவன், பிரம்மனின் ஐந்தாவது சிரத்தைக் கொய்த தலம். அதனால் இத்தலத்து மூலவர் 'பிரம்மசிரகண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்.
மூலவர் 'பிரம்மசிரகண்டீஸ்வரர்', 'வீரட்டநாதர்' என்னும் திருநாமங்களுடன், உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'மங்களநாயகி' என்ற திருநாமத்துடனும் வணங்கப்படுகின்றாள்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் ஐந்தாவது தலம். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள். சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்று. பிரம்மனின் ஐந்தாவது சிரத்தைக் கொய்த தலம். திருப்பறியலூர், திருக்கடையூர், திருவதிகை, திருசிறுகுடி, கொருக்கை, வழுவூர், திருக்கோவிலூர் ஆகிய மற்ற வீரட்டத் தலங்கள்.
பிரகாரத்தில் துர்க்கை சன்னதி அருகே பிரம்மதேவனுக்கும், சரஸ்வதிக்கும் சன்னதி உள்ளது. இருவரும் பெரிய வடிவம் கொண்டு காட்சி தருகின்றனர்.
மாசி மாதம் 13 முதல் 15 வரை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுகிறது.
இக்கோயிலுக்கு அருகில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் உள்ளது.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 'ஏழு திருப்பதி' என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். சப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழ் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|